Thursday, 26 March 2020

கொரோனா – அரசின் நடவடிக்கையும் நமது நிலையும்!

கூட்டம் கூட்டமாகக் கொல்லும் உயிர்க்கொல்லி நோயான கொரொனாவைத் தடுக்கும் முயற்சியில், "இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கையைக் கழுவுங்கள்; மாஸ்க் அணியுங்கள்" என்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. வரவேற்போம்; செயல்படுவோம். 

முஸ்லிம்களான நமக்குக் கை கழுவுதல் என்பது புதிதோ சிரமமானதோ அல்ல; நமக்கு வழக்கமானதே. சாப்பிடும்போது முன்னும் பின்னும் இரு முறை கைகளைக் கழுவுவதாகட்டும், மலம், சிறுநீர் கழித்த பின் இரண்டையும் சுத்தம் செய்வதோடு கையையும் சுத்தம் செய்வதாகட்டும், குளிப்பு கடமையான நிலையில் தேவையான ஒவ்வொரு செயலுக்கும் முன்பும் ஒழு செய்வதாகட்டும், ஐவேளை தொழுகைக்கான ஒழு செய்வதாக இருக்கட்டும், இப்படிப் பல்வேறு தேவைக்காக ஒரு நாளில் முஸ்லிம்கள் கைகளைக் குறைந்தது இருபதுமுறை கழுவுகிறோம். நம்மிடம், "கைகளைக் கழுவிக்கொள்ளுங்கள்" எனக் கூறினால் நமக்கு சிரமம் அல்லவே. ஆண்களைவிட பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. பெண்கள் முகத்தை மூடிக்கொள்ளுங்கள் என 1400 ஆண்டுகளுக்கு முன்பே "...தமது முக்காடுகளை(நீட்டி)த் தம் மார்பின்மேல் போட்டு(மறைத்து)க் கொள்ளட்டும் …” (அல்குர்ஆன் 24:31) என்று இஸ்லாம் சொல்லியதை இன்று  நமது அரசு சொல்கிறது.

கொரோனாவைத் தடுக்கும் அடுத்த முயற்சியாக 'லாக்டவுன்' அறிவிக்கப்பட்டுள்ளது. "ஒரு மாவட்டம் விட்டு அடுத்த மாவட்டம் போகக்கூடாது" என அரசு கட்டளையிட்டுள்ளது. "கொள்ளை நோய் ஒரு பகுதியில் இருந்தால் யாரும் அங்குச் செல்லவேண்டாம். நீங்கள் இருக்கும் பகுதியில் அது பரவிவிட்டால் அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக வெளியேறாதீர்கள்" என நபி ஸல் கட்டளையிட்டார்கள்.(புகாரி 5728).

ஆக, இஸ்லாம் சொன்னதைத்தான் இன்று அரசு செய்து வருகிறது.  "நல்லவர்களுக்குக் கொள்ளை நோய் அல்லாஹ்வின் ரஹ்மத்.  அல்லாஹ்வின் விதியை ஏற்று அவனின் வெகுமதியை எதிர்பார்த்து உயிரை விட்டவர் ஷஹீத் - உயிர்தியாகி ஆவார்" (புகாரி 5734) என நபி ஸல் கூறியுள்ளதால் உயிருக்கு பயந்து ஊரைவிட்டு ஓடக்கூடாது. நமது ஊரில் பாதிப்பே இல்லை என்றாலும் அடுத்த ஊரில் இருக்கக்கூடும் என்பதால் நபியின் கட்டளையின்படி பயணம் செல்லக்கூடாது. சுருக்கமாகச் சொன்னால் "இந்தியர்களே! முஸ்லிம்களின் வாழ்வியல் நெறியைப் போல் வாழுங்கள்" என அரசு சொல்லாமல் சொல்கிறது. எனவே முஸ்லிம்களே! நாம் முஸ்லிம்களாக வாழ்வோம்.

அரசு சொல்வதை ஏற்று நடக்கும் அதே நேரத்தில் இது நபியின் சுன்னா – வழிமுறை என்ற எண்ணத்தையும் மனத்தில் கொண்டால், ஒவ்வொரு செயலுக்கும் நமக்கு நண்மையும் கூடிக்கொண்டு இருக்கும். வெளியூர்ப் பயணம் செல்லாமல் காத்து இருக்கும் ஒவ்வொரு விநாடிக்கும் நன்மைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும், இன்ஷா அல்லாஹ்.

இஸ்லாம், கொள்ளை நோயைக் கட்டுப்படுத்த உயிரையும் தியாகம் செய்திடும் அளவிற்கு நம்மைப் பக்குவப்படுத்தியுள்ளது. எனவே அரசின் இச்செயலை அல்லது சிரமங்களை  வரவேற்போம், கட்டுப்படுவோம், செயல்படுத்துவோம்.

தொழுகை மற்றும் ஜுமுஆ பற்றிய நிலைப்பாடு:
கொரோனாவில் பாதித்த அனைவரும் உயிர் இழப்பர் என்பது கட்டாயமல்ல. தனக்கு கொரோனா வந்ததே தெரியாமல் சிலர் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டும் இருப்பர். அவருக்கு எந்த அறிகுறியும் தெரிந்திருக்காது. அவ்வளவு ஆரோக்கியம் அவருக்கு இருந்திருக்கும். ஆனால் அந்த இடைப்பட்ட காலத்தில் அவர் மூலமும் கொரோனோ மற்றவருக்குப் பரவியிருக்க வாய்ப்புண்டு.

கொரோனா பரவுவதற்கு ஒரு வாய்ப்பாக நமது கூட்டுத் தொழுகை இருந்திடக்கூடாது. "பூண்டு, வெங்காயம் போன்றவற்றைப் பச்சையாகச் சாப்பிட்டவர்கள், கூட்டுத் தொழுகைக்குப் பள்ளிக்கு வராதீர்கள் - ஏனெனில், அவற்றின் வாடை மற்றவருக்குத் தொல்லை தரும்" (முஸ்லிம் 976) என நபி (ஸல்) தடுத்திருப்பதால்  கொரோனாவின் அறிகுறிகளான சாதாரண இருமல், காய்ச்சலாக இருந்தாலும் இச்சூழ்நிலையில் அது மற்றவர்களுக்குத் தொல்லையை ஏற்படுத்தும் என்பதால் காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் பள்ளிக்கு வருவதை அறவே தவிர்த்திடுங்கள். உடல் ஆரோக்கியம் இருந்தாலும் அரசால் சந்தேக முன்னெச்சரிக்கையுடன் அடையாளப்படுத்தப்பட்ட வீட்டைச் சார்ந்தோரும் பள்ளிக்கு வருவதைத் தவிர்ந்திருங்கள்.

ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதால் கூட்டம் கூடி, பள்ளி நிர்வாகத்தினருக்கு சங்கடம் தந்திடாமல் வீட்டிலேயே தொழுதிடுமாறு நிர்வாகத்தின் சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

⇛பள்ளியில் வழக்கம்போல் பாங்கு சொல்லப்பட்டாலும் மக்கள் வீட்டிலேயே தொழுது கொள்வது நல்லது.

⇛பள்ளியின் அருகில் இருப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். அரசால் முன்னெச்சரிக்கை அடையாளப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அவரைச்சார்ந்தவர்கள் கூடாது.

⇛தொழுகை மிக விரைவாக முடிக்கப்பட்டு விடும்.

இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா?
"தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக்கொண்டு சகுனம் பார்ப்பதும் கிடையாது ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ஸஃபர் மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு" என நபி (ஸல்) சொல்லியுள்ளார்கள். (புஹாரி 5707). எனவே, இஸ்லாத்தில் தொற்றுநோய் என்று ஒன்று கிடையாது. நோய் பரவுமா என்றால் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் பரவும். கொள்ளை நோய் பரவி மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்ததை ஹதீஸ்களில் நாம் படிக்க முடிகிறது.

கொரோனா இருக்கும் ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொட்டாலோ பார்த்தாலோ சுவாசத்தாலோ அல்லது இவரின் இரத்தமே மற்றவருக்கு ஏற்றப்பட்டாலும்கூட அல்லாஹ்வின் அருளால் மற்றவரின் எதிர்ப்பு சக்தியைக்கொண்டு கொரோனா எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் போய்விடக் கூடும். அதேபோல் பாதிக்கப்பட்டவரை, தொடாமல் இருந்தாலும் மற்றவருக்கும் அது பரவிடவும் வாய்ப்புள்ளது. எனவே கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லிம், 'இன்னொரு மனிதரால்தான் நான் பாதிக்கப் பட்டிருக்கின்றேன்' என நினைக்கக்கூடாது மாறாக, அல்லாஹ்வின் விதியின்படியே என நம்பவேண்டும்; அதை ஏற்கவேண்டும். உயிர் பிரியும் என்றாலும்கூட உயிருக்கு பயந்து ஓடக்கூடாது என்பதே இஸ்லாம்.

தொற்று இல்லை எனக் கூறிய அதே நபி (ஸல்), அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் காட்டித் தந்துள்ளார்கள். சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு என்று எச்சரித்ததன் மூலம், ஐயத்திற்கு இடமானவர்களிடமிருந்து நாம் கூடுமானவரை ஒதுங்கி இருக்கவேண்டும் என்றும், (வெருண்டோடுதல் என்ற உவமைச் சொல்லுக்கு, துண்டைக் காணோம்; துணியைக் காணோம் என ஓடுவது என்பது பொருளல்ல. 'தூரமாகுதல்' என்பதே அதன் பொருளாகும்) "கொள்ளை நோய் பாதிக்கப்பட்ட பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் அங்கிருந்து யாரும் வெளியேற வேண்டாம்" எனச் சொன்னதன் மூலம் 'சுய தனிமை'ப் பொருளும் அந்த அறிவுரையில் பிணைந்திருப்பதை உணரலாம்.

இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்பவர்களிடம் கையைப் பிடித்து சத்தியப்பிரமாணம் செய்யும் நபி ஸல் அவர்கள், தொழுநோயாளியிடம் கையைப் பிடித்து பைஅத் செய்யாததே, அவர்களிடமிருந்து தனித்து இருக்க வேண்டும் என்பதையும் "நோய் பீடித்த ஒட்டகத்தை மற்ற ஒட்டகத்துடன் சேர்க்காதே" என்பதிலிருந்து தனிமைப் படுத்துதல் வேண்டும் என்பதையும் தெளிவாக்குகின்றது.

ஆக, தொற்று நோய் உண்டா, இல்லையா? என விவாதித்துக்கொண்டும், கொரோனா பரவியதா, பரப்பியதா? என ஆய்வு செய்து கொண்டும் நேரத்தை வீணடிப்பதை விடவும் இது போன்ற சூழ்நிலையில் இஸ்லாம் துயர்களை எவ்வாறு எதிர் கொள்ளச் சொன்னது என்பதை அறிந்து அதுபோல் செயல்படுவோமாக!

கூடுதலாக, நம்முடைய பிரார்த்தனைகளில், "எங்கள் இறைவா! எங்களையும் உலக மாந்தர் அனைவரையும் கொள்ளை நோய்களிலிருந்து காப்பாற்றுவாக!" என்று அல்லாஹ்விடம் வேண்டிட மறக்க வேண்டாம்.

No comments:

Post a Comment