Wednesday 22 April 2020

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு ...

அனுப்புநர்                                                                                                      நாள்:  22-04-2020
அனைத்து அரசியல் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பு,
அதிராம்பட்டினம்.

பெருநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள், collrtnj@nic.in
தஞ்சாவூர்.

மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு,

பொருள்: அதிராம்பட்டினம் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பாக வைக்கப்படும் கோரிக்கைகள்.

அதிராம்பட்டினத்தைச் சுற்றியுள்ள கிராம மக்களிடம் ‘கொரோனா நோய் முஸ்லிம்களால் மட்டுமே பரவுகிறது’ என்ற தவறான எண்ணம் பரப்பப்பட்டதன் விளைவாக அதிராம்பட்டினத்திற்கு வரவேண்டிய பால், காய்கறி போன்ற அத்தியவாசிய பொருட்களை எடுத்துவர கிராமத்தினர் அனுமதிக்காததாலும் மததுவேஷத்துடன் கூடிய வெறுப்பு நடவடிக்கையில் சிலர் ஈடுபடுவதால் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும்,

அதிராம்பட்டினத்திற்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் வீட்டைச் சுற்றி 50  மீட்டர் அளவிற்குத் தடை செய்யப்படுவதால் அப்பாவி மக்கள் பலருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்பதாலும்,

எதிர் வரும் நோண்பு நாட்களில், அத்தியாவாசியப் பொருட்கள் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட காலை 8 மணியிலிருந்து பகல் 2மணிவரை (6 மணி நேரம்) என்பதைப் பயன்படுத்த முடியாது என்பதாலும்,

அதிராம்பட்டினம் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்து 20-04-2020 அன்று ஆலோசித்து எடுக்கப்பட்ட தீர்மானங்களைக் கோரிக்கைகளாக வைக்கிறோம்:

ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டப்பின், 06/04/2020 தேதியிட்ட ந.க.எண்-920/2020/அ2 வட்டார வளர்ச்சி அலுவலரின் உத்தரவிற்கு இணங்க, அதிராம்பட்டினம் பேரூராட்சியைத் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரும், ‘அதிராம்பட்டினத்தைச் சுற்றியுள்ள 10 கிராமங்களையும் தனிமைப்படுத்துதல் வேண்டும்’ என்ற தகவலுக்குப் பிறகு அதிராம்பட்டினம் முழுமையாகத் தனிமைப் படுத்தப்பட்டது. குழந்தைகளுக்கு தேவையான பசும்பால் உட்பட அத்தியவாசிய பொருட்களை அதிராம்பட்டினத்திற்கு அளித்துவந்த கிராம வியாபாரிகள் நிறுத்தப்பட்டனர்.

எனவே, அவசிய தேவை கருதி வட்டாட்சியரின் முறையான அனுமதியுடன் பழஞ்சூர், மன்னங்காடு, துவரங்குறிச்சி ஆகிய கிராமங்களிலிருந்து அதிரையைச் சார்ந்த தன்னார்வலர்கள் மூலம் தினசரி 600 லிட்டர் பால் எடுத்துவரப்பட்டு தேவைப்படுவோர்க்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு எடுத்துவரும்போது அவ்வப்போது மழவேனிற்காடு என்ற கிராமத்தில் அமைக்கப்பட்ட செக் போஸ்டில் கிராம மக்கள்கூடி அதிராம்பட்டினத்திற்கு எடுத்துவரும் பாலைத் தடுக்கின்றனர். காவல்துறை தலையிட்டப்பின் அனுமதிப்பதும், பிறகு மீண்டும் தடுப்பதும் வழக்கமாகி வருகிறது. நேற்றும் இதுபோல் தடுக்கப்பட்டபோது, கலவரம் ஏற்படும் சூழல் உருவாகியது. எனவே அரசு இதைக் கவனத்தில் கொண்டு சுமூக சூழ்நிலையை உருவாக்கவேண்டும். தினமும் பசும்பால் அதிரைக்குக் கிடைத்திட அரசு ஆவன செய்தல் வேண்டும். வட்டாட்சியர் அனுமதித்த, அதிரையைச் சார்ந்த தன்னார்வர்கள் மூலம் பசும்பாலை அதிரைக்குக் கொண்டுவந்துவிடவோ அரசே முன்னின்று பாலை எடுத்துவந்து அதிரைக்குத் தந்திடவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழவேனிற்காடு செக் போஸ்டில் பக்குவமற்ற ஊர்க்காவல் படையைச் சார்ந்தவர்களைப் பணியமர்த்தாமல் காவல்துறையைச் சார்ந்தவர்களைப் பணியில் அமர்த்தவேண்டும்.

மேலும், மாளியக்காடு செக் போஸ்டில் பணியில் உள்ள பெண் காவலர் ஒருவர், அதிரைக்கு வரும் அத்தியவாசியப் பொருட்களை மத துவேஷத்துடன் தடுத்து வருகிறார். வட்டாட்சியர் அனுமதியோடு அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தபோதிலும், “முஸ்லிம்களை அனுமதிக்க முடியாது” என மத துவேஷத்துடன் பேசுகிறார். இவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து தகுந்த அதிகாரியை அந்த செக் போஸ்டில் பணியமர்த்த வேண்டும்.

கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட இருவேறு எல்லைகளில் உள்ள இரு வீட்டாரை இணைந்தவாறு பாதையை அடைக்கும்போது நடுவில் மாட்டிக்கொள்ளும் சில அப்பாவிகளும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அடைக்கப்படும் வேலியானது மிகவும் உறுதியானதாக இருப்பதால் மருத்துவ அவசத்திற்குக்கூட அப்பாதையைப் பயன்படுத்த முடியாதவாறு போடப்பட்டுள்ளது. மேலும் சிறப்புச் சலுகையாக அரசால் அனுமதிக்கப்பட்ட கடைகளும் இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இதில் சலுகை காட்டப்பட வேண்டும் என கோரிக்கை வைகின்றோம்.

தொடர் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோதும் மக்களின் அவசியத் தேவையைக் கருத்தில் கொண்டு காலை 8 மணி முதல் 12 வரை மட்டும் சில நிபந்தைகளோடு சில கடைகள் இயங்க அரசு அனுமதித்துள்ளது. இது அவசிய விதிவிலக்கே. மக்களின் இயல்பான வாழ்க்கை சூழலை கருத்தில் கொண்டு இந்நேரம் அமைக்கப்பட்டுள்ளது. அதிரைக்கும் இந்த நேரம் பொருத்தமாகவே உள்ளது. ஆனால் எதிர்வரும் 25ஆம் தேதிக்குப் பிறகு நோன்பு ஆரம்பிக்க இருப்பதால், இயல்பான சூழ்நிலைக்கு மாற்றமாக அதிரை மக்களின் நிலை மாறிடும். பகல் பொழுதின் முக்கிய உணவுகளான காலை மற்றும் மதியம் உணவு தவிர்க்கப்பட்டு இரவு மற்றும் அதிகால 4 மணிக்கே உணவு தேவைப்படும். Peak Time எனச் சொல்லப்படக்கூடிய காலை பொழுதில் மக்கள் வெளியே வருவதும் நோன்புக் காலத்தில் இயல்பாகவே குறைந்திடும். எனவே மக்களின் அவசிய தேவைக்காக அனுமதித்த சிறப்பு கடை திறப்பு நேரத்தை நோன்புக் காலத்தில் மட்டும் அதிரை மக்கள் பயன்படுத்தக்கூடிய நேரமான பகல் 12 மணியிலிருந்து மாலை 6 மணிக்கு மாற்றித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி!

இப்படிக்கு,
ஒப்புதலுடன் டிஜிடல் கையொப்பம்
copy to: rdopkt.tntnj@nic.in

No comments:

Post a Comment