Sunday, 21 August 2016

கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி? Cancer Awareness Program

ந்த நூற்றாண்டில் மனித சமூகத்துக்குப் பெரும் சவாலாக உள்ள நோய்களுள் மிக முக்கியமானது ‘கேன்ஸர்’ எனும் புற்றுநோயாகும். இந்தியாவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

புற்றுநோய் என்றால் என்ன?


மனித உடலின் வளர்ச்சிக்கும் இயக்கத்துக்கும் இன்றியமையாதவையாகத் திகழும் ‘செல்கள்’ எனும் உயிரணுக்களைச் செயற்படவிடாமல் தடுக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்கின்றோம். 

கேன்ஸர் எனும் புற்று நோயின் உற்பத்தியைப் பற்றிக் கட்டாயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு குழந்தை பிறந்து வளர்கிறதென்றால் குறிப்பிட்ட கணக்கில் அக்குழந்தையினுள் செல்கள் பிறந்து, தன் பணியினை முடித்துக்கொண்டு உயிரிழந்துவிடும். உயிரிழந்த செல்கள் அழிந்துகொண்டிருக்கும்போதே புதிய செல்கள் பழைய செல்களின் அளவைவிடக் கூடுதலாகப் பிறந்துவிடும். பழைய செல்களின் இறப்பும் அவற்றின் அழிவும் புதிய செல்களின் உற்பத்தியும்தான் குழந்தையையும் அதன் தலை முடியையும் நகங்களையும் விரைந்து வளர்க்கின்றன. பழைய செல்களின் இறப்பைவிட, புதிய செல்கள் குறைவாக உற்பத்தி ஆவதையே நாம் ‘முதுமை’, ‘நினைவாற்றல் குறைவு’, ‘தடுமாற்றம்’ என்கின்றோம்.

ஆரோக்கியமான உடல் நலம் உள்ள ஒருவருக்கு, எத்தனை செல்கள் புதிதாகப் பிறக்கின்றன தெரியுமா?

ஒரு வினாடிக்கு சுமார் 20,00,000 (2 மில்லியன்) செல்கள்! வளரும் இளைஞர் ஒருவரின் உடலில் அழியும் செல்களை ஈடுகட்டவும் புத்தியக்கத்திற்கும் பிறப்பெடுக்கும் செல்களின் ஒரு நாள் எண்ணிக்கை சுமார் 222-242 பில்லியன். உயிரை இழந்து அழியும் செல்களின் ஒரு நாள் எண்ணிக்கை 50-70 பில்லியன்.

இவ்வாறாக, உயிரிழந்து அழியவேண்டிய செல்கள், அழிந்துவிடாமல் சிலரின் உடலில் தங்கிவிடுகின்றன. வீணான, தேவையற்ற இந்த செல்கள்தாம் ‘கேன்ஸர் செல்கள்’.

 • கேன்ஸர் எனும் புற்று நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் யாவை?
 • எந்த வகையான உணவுப் பொருட்களைத் தவிர்த்துக்கொண்டால் …?
 • எந்தப் பொருட்களைப் பயன்படுத்தாவிட்டால் …?
 • எந்த வகை வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டால் … புற்று நோயிலிருந்து தப்பிக்கும் சாத்தியங்கள் உள்ளன?

என்பது குறித்து ஆழமான விழிப்புணர்வு முகாம் ஒன்றை அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாடு செய்துள்ளது. அதன் விபரங்கள்:

இடம் : பவித்ரா திருமண மண்டபம், ECR, அதிராம்பட்டினம்.
காலம் : 29.8.2016 திங்கட்கிழமை, காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை
காணொளி விளக்கம் : டாக்டர் M. முஹம்மது இப்ராஹீம்.
                                               MS., MRCS (UK)., DNB., FMAS., FAIS.

நிகழ்ச்சியின் இறுதியில் புற்று நோய் குறித்த உங்கள் ஐயங்களைக் கேள்விகளாகக் கேட்டுத் தெளிவடையலாம்.

சிறந்த கேள்விகள் கேட்கும் மூவரைத் தேர்ந்தெடுத்து,  பரிசுகள் வழங்கப்படும்.
 
பெண்களுக்குத் தனி இட வசதி உண்டு.

டாக்டரிடம் தனியாகச் சிறப்பு ஆலோசனை பெற முன் பதிவு செய்துகொள்ளுங்கள்: 9043727525.


Wednesday, 6 April 2016

அமைதிக் கூட்ட நடவடிக்கைகள் 06.04.2016

அதிராம்பட்டினம் மேலத்தெரு ஜமாஅத் லட்டர் பேடை உபயோகித்து, அதன் தலைவர் MMS சேக் நஸ்ருதீன் அவர்கள் கந்தூரிக்கு ஆதரவு தெரிவித்து எழுதிய கடிதத்தை இன்று வட்டாட்சியரிடம் கொடுத்து, கந்தூரிக்கு எதிர்ப்பே இல்லை என்பது போன்ற தவறான தோற்றத்தை, கந்தூரிக் கமிட்டியினர் உருவாக்க முயன்றனர். தாருத் தவ்ஹீதின் முந்தைய எதிர்ப்புப் பதிவுகள் கோப்புடன் வட்டாட்சியருக்கு சமர்ப்பிக்கப்பட்டு அம்முயற்சி முறியடிக்கப்பட்டது. 

மேலத்தெருவின் இதே ஜமாஅத் தலைவர், இரண்டாண்டுகளுக்கு முன்னர்  வட்டாட்சியரிடம் கூட்டத்தில் ஆஜராகி, கந்தூரிக்கு தெரு ஜமாஅத் சார்பாக ஆதரவு தர வந்ததாகக் கூறி,  அதிரை தாருத் தவ்ஹீதின் பொருளாளர் நிஜாமுத்தீனின் ஆட்சபனையால் அதனைத் திரும்பப் பெற்றார் என்பது இங்கு நினைவு கூரத் தக்கது.

கந்தூரி எதிர்ப்பாளர்களுள் மேலத்தெருவைச் சேர்ந்த முக்கியஸ்த்தர்களான ராஜிக் TNTJ,  நிஜாமுத்தீன் ADT ஆகிய இருவரும் தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் உரியவருக்கு உணர்த்தியுள்ளனர்.
__________________________________________________________________________________

கூட்ட நடவடிக்கைகள்

பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் நகரில் உள்ள காட்டுப்பள்ளிவாசல் திருவிழா (தர்கா) 08.04.2016 முதல் 21.04.2016 வரை மேலத்தெரு, கீழத்தெரு பெரிய ஹந்தூரி விழா கமிட்டியினருக்கும் அதிராம்பட்டினம் தாருத் தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் திருவிழாவில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதெனத் தெரிவிக்கப்பட்டதன் பேரில், இதன் தொடர்பான அமைதிக்கூட்டம் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முன்னிலையில் 06.04.2016 அன்று மதியம் 12.00 மணியளவில் நடத்தப்பட்டது. இதில் விழாக் கமிட்டியினர் மற்றும் எதிர்த் தரப்பினர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:
 1. காட்டுப்பள்ளி தர்காவில் 08..04.2016 அன்று மாலை 4.00 மணிக்கு (ஊர்வலம்) தொடங்கி அதிராம்பட்டினம் முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று மாலை 7.00 மணிக்கு முடித்துக்கொள்ள வேண்டும்.
 2. காட்டுப்பள்ளி தர்காவில் விழா தொடங்கும்போதும் முடிக்கும்போதும் சப்தம் சிறிதளவே வரக்கூடிய பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போகும் இடத்தில் எந்த இடத்திலும் வெடி வெடிக்கக்கூடாது.
 3. மேற்படி ஊர்வலம் நடுத்தெரு, புதுமனைத்தெரு, CMP Line,  பொது மருத்துவமனைத்தெரு, மேலத்தெரு அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவாசல் (பகுதி) ஆகியவற்றில் ஊர்வலம் செல்லக்கூடாது.
 4. விழாக் குழுவினர் ஹந்தூரி விழாவில் பங்கேற்றுச் செல்ல வேண்டும்.
 5. ஹந்தூரி விழா ஊர்வலத்தில் 1 கொடி, 1 பல்லக்கு, 5 உருப்படி, மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. ஐந்து உருப்படியும் ஒவ்வொரு உருப்படிக்கும் 10 மீட்டர் இடைவெளியில் தொடர்ந்து வரவேண்டும்.
 6. பள்ளிவாசல்களுக்கு முன்னும் பின்னும் 100 மீட்டர் இடைவெளியில் வாத்திய இசைக் குழுவினர் இசைக்கக்கூடாது.
 7. ஊர்வலத்தில் முன்னும் பின்னும் சிறியவர், பெரியவர்கள் ஆடி, பாடிச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
 8. எதிர்த் தரப்பினர் சட்டம்-ஒழுங்கு எங்களால் பாதிக்கப்படாது எனவும், மேற்படி விழாவுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது எனவும் தெரிவித்தனர்.
 9. விழாவில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் வகையில் அசம்பாவிதம் ஏற்படுமாயின் விழாக் குழுவினர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என் முடிவு செய்யப்பட்டது.
 10. தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் எந்த ஒரு கட்சி சின்னமோ இதர கட்சி வர்ணங்களோ இடம்பெறாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு (விழா) நடத்த அனுமதிக்கப்படுகிறது.
 11. பொதுமக்கள் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்களின் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது.
 12. மேற்காணும் நடவடிக்கைகள் முழுதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி வீடியோ பதிவு செய்யப்படும்.
மேற்கண்ட நிபந்தனைகள் மீறப்பட்டதாகத் தெரிய வந்தால் மேற்படி தேர்தல் நடத்தை விதிகளின்படி வழக்குகள் தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இன்றைய அமர்வில் பழைய ஆவணங்கள் பயன்பட்டதுபோல் வருங்கால சந்ததியினருக்காக இந்த ஆவணங்கள் இங்குப் பதியப்படுகின்றன.