Friday 16 August 2024

கந்தூரி எதிர்ப்பு - கடற்கரைத்தெரு கந்தூரி 2024

 

இம்முறை மாவட்ட ஆட்சியரிடமிருந்து இன்று கடைசி நாள் (16.8.2024) வரை எவ்வித பதிலும் இல்லை - ஆவணத்துக்காக

3.8.2024

உயர்திரு தீபக் ஜேக்கப் IAS, அவர்கள்

மாவட்ட ஆட்சியர்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தஞ்சாவூர் – 613 001

தொலைபேசி : 04362-230102 தொலைநகல் : 04362-230206, மின்னஞ்சல் : collrtnj@nic.in

பொருள்: அதிராம்பட்டினத்தில் கந்தூரியை ஒட்டி சட்டம் ஒழுங்குப் பிரச்சினை

மரியாதைக்குரிய ஐயா,

கந்தூரிகளுக்கும் கந்தூரி ஊர்வலங்களுக்கும் நாங்கள் தொடர்ந்து தடை கோருவதற்கு, அவற்றில் நடக்கும் இஸ்லாமிய விரோதச் செயல்கள் மட்டுமின்றி சமூக விரோதச் செயல்களின் ஊற்றுக் கண்ணாகக் கந்தூரி விழாக்கள் விளங்குவதாலும் அவற்றைத் தடை செய்யவேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றோம்.

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தர்ஹாவில் எதிர்வரும் 5.8.2024இல் தொடங்கி, 16.8.2024 வரை கந்தூரி நடைபெறவுள்ளது.

இதே கடற்கரைத் தெரு கந்தூரியின்போது, கடந்த 23.12.2012 மாலையில் தர்காவிலுள்ள சமாதிக்கு சந்தனம் பூசுவதற்கு உள்ளே சென்ற பட்டத்து அலாவுத்தீன் என்பவர் ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறந்தார். கந்தூரி எனும் மடமையினால் ஓர் உயிர் பலியானதைப் பற்றி பல்லாண்டுகளாகப் பல மடல்களில் தெரிவித்திருக்கின்றோம்.

கடந்த 2012 ஆண்டின் காட்டுப்பள்ளிக் கந்தூரி ஊர்வலத்தின்போது நடுத்தெரு தக்வாப் பள்ளியில் மாலைத் தொழுகைக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தின்போது திட்டமிட்ட கொலை முயற்சியொன்று அதிராம்பட்டினம் காவல்துறையில் முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்யப்பட்டு (FIR 96&97/2012) வழக்கு நடைபெற்று வருகிறது.

கந்தூரியும் ஊர்வலமும் முஸ்லிம்களின் சமயமான இஸ்லாத்திற்கு எதிரானவை” எனும் சான்றாதாரங்களின் அடிப்படையில் தகுந்த காரணங்களை விளக்கி, வன்முறைகளும் ஆபாசங்களும் அரங்கேறும் கந்தூரிகளைத் தடை செய்ய வேண்டும் எனும் கோரிக்கை மனு ஒன்றைக் கடந்த 4.5.2013 நாளிட்டு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் உயர்திரு கே. பாஸ்கரன், ஐ.ஏ.எஸ் அவர்கள் தொடங்கி இதுவரைக்கும் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கின்றோம்.

எங்களுடைய கோரிக்கையைத் தக்கவாறு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பீர்கள் என்றே இதுவரை எதிர்பார்த்திருக்கின்றோம்.

கடந்த (30.4.2014)இல் நடைபெற்ற காட்டுப்பள்ளி தர்கா கந்தூரியின்போது, கந்தூரிக்குத் தீவிர எதிர்ப்பாளர்களான மேலத்தெரு பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மசூதியைச் சுற்றி வாழ்பவர்கள் கந்தூரி ஊர்வலம் அந்தப் பகுதிக்கு வரக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதியும் அதுபோன்ற இன்னும் சில பகுதிகளும் Sensitive Areas என்பதை அதிராம்பட்டினம் நகரக் காவல்துறை ஆய்வாளர் அவர்களின் ஆய்வுக்குப் பின்னர் கோட்டாட்சியர் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, தீர்மானத்தில் பதிவு செய்யப்பட்டது (29.4.2014 கோட்டாட்சியர் அலுவலகத் தீர்மானம் எண் 6).

சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளோடு கந்தூரிகளைத் தடை செய்யவேண்டும் என்ற எங்களின் கோரிக்கைக்கான நியாயமான, சமயம் மற்றும் சமூகம் சார்ந்த காரணங்கள்:

  • இறந்துபோன மகான்களின் பெயரால் கந்தூரி விழாக் கொண்டாட்டம் என்பது இஸ்லாமிய சமயத்துக்கு எதிரானது.
  • கந்தூரிகளில் நடைபெறும் பாட்டு, கூத்து, கச்சேரிகள், சூதாட்டம் ஆகியன இஸ்லாமிய சமய விழுமியங்களுக்கு எதிரானவை.
  • முறையற்ற தொடர்பு/உறவு மற்றும் கள்ளக் காதல் ஆகியன உருவாவதற்குக் கருவறையாகக் கந்தூரி விழாக்கள் பயன்படுகின்றன.
  • பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கந்தூரிக் கமிட்டியினரால் வசூல் செய்யப்படும் பணம், இஸ்லாத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுவதோடு இரவில் வாண வேடிக்கை எனும் பெயரால் முதியோர், நோயாளிகள், குழந்தைகள் ஆகியோருக்குத் தொல்லை தருகிறது.
  • கந்தூரி ஊர்வலத்தின்போது சமூக விரோதச் செயல்களான போதைப் பயன்பாடு, ஆபாசப் பேச்சுகள், கலவரங்கள், கல்லெறிதல், பெண்களைக் கேலி செய்தல் நடைபெறுகின்றன.

மேற்காணும் தொல்லைகளையும் சமூகப் பாதிப்புகளையும் உண்டாக்குகின்ற கந்தூரியைத் தாங்கள் தயவு கூர்ந்து தடை செய்வதற்கு ஆவண செய்ய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.

அமைதிக் கூட்டம் அனைத்திலும் நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்து வருகின்றோம். இந்த மூன்று அம்சங்களும் அமைதிக் கூட்ட நடவடிக்கைகளின் தொகுப்பில் எங்கள் சார்பாக இடம்பெறல் வேண்டும்.:

  1. இஸ்லாத்துக்கும் கந்தூரிக் கொண்டாட்டங்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.
  2. எனவே, கந்தூரிக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.
  3. சட்டம் ஒழுங்குப் பிரச்சினை என்பது எங்களால் இதுவரை ஏற்பட்டதில்லை.

நன்றி!

 

                                                            Jameel M. Salih (signed)

                                                         தலைவர் (9043-727-525)

                                                          அதிரை தாருத் தவ்ஹீத் பதிவு எண் 4/230/2012

நகல்கள்:

  1. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள், தஞ்சாவூர்
    Tel : 04362-277220; Fax : 04362-271553 spthanjavur@yahoo.com
  2. வருவாய் கோட்டாட்சியர் அவர்கள், பட்டுக்கோட்டை
  3. நகர காவல்துறை ஆய்வாளர் அவர்கள், அதிராம்பட்டினம்.

 


Friday 18 August 2023

அழைப்பாணை இல்லாத கடற்கரைத் தெரு கந்தூரி

 மாவட்ட ஆட்சியருக்கும் முதலமைச்சரின் தனி மின்னஞ்சலுக்கும் :

 
மரியாதைக்குரிய ஐயா,

கந்தூரி காலத்தில் வழக்கமாகப் பட்டுக்கோட்டை வட்டாட்சியரிடமிருந்து இரு நாட்களுக்கு முன்னர் அழைப்பாணை அனுப்பப்பட்டு, கந்தூரிக்கு ஒருநாள் முன்னர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதில் எங்களுடைய கருத்துகளும் கோரிக்கைகளும் கேட்கப்படும். இவ்வழக்கம் கடந்த பதினொரு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவருகின்றது.

ஆனல், இம்முறை கந்தூரி தினமான இன்று (18.8.2023) பகல் 2:30 வரை எங்களில் யாருக்கும் அழைப்பாணை அனுப்பப்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதாக அறிகின்றோம்.