Thursday 16 April 2015

காட்டுப்பள்ளி தர்கா கந்தூரி - அமைதிக் கூட்ட நிகழ்ச்சிக் குறிப்புகள்

அஸ்ஸலாமு அலைக்கும்.


பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கையெழுத்திட்டு அறிவிப்புக் கடிதம் ஒன்று (ந.க 200 / 2015 அ 3 - தேதி 11.4.2015) அதிரை தாருத் தவ்ஹீதின் அமீருக்கும் செயலருக்கும் கட்ந்த 14.4.2015 அன்று வழங்கப்பட்டது.
அதிராம்பட்டினத்தில் கந்தூரி என்றாலே கந்தூரி எதிர்ப்பாளர்களாக அரசு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தாருத் தவ்ஹீதுக்குக் கோட்டாட்சியரிடமிருந்து அழைப்பு வந்துவிடும். இம்முறை நான்கு அமைப்பினருக்கு அழைப்பு வந்தது.



அமைதிக் கூட்டம் நடத்துவதற்கு முடிவு செய்த 15.4.2015 அன்று கடைசி நேரத்தில், கூட்டம் தள்ளிவைக்கப் படுவதாகத் தகவல் வந்தது. வழக்கம்போல் கந்தூரிக்கான எதிர்ப்பைத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியருக்கு 13.4.2015 நாளிட்டுக் கடிதம் எழுதியிருந்தோம்.

மறுநாள் 16.4.2015 காலையில் மறு அழைப்பு வந்து, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். எங்களுக்கு முன்னதாக கந்தூரிக் கமிட்டியினர் அங்கு வந்து குழுமியிருந்தனர். எஸ்டிப்பிஐ அமைப்பினர் வரவில்லை. த.மு.மு.க.வினர் வந்திருந்தனர். இறுதியாகத் ததஜவினர் வந்து சேர்ந்த பின்னர் 12 மணியளவில் கூட்டம் தொடங்கியது.

தொடக்கமாக, கந்தூரிக் கமிட்டியினரோடு கூடவே வந்து அமர்ந்த முத்துப்பேட்டை தர்கா ட்ரஸ்டி பாக்கர் அலியை வெளியேற்றுமாறு அதிரை தாருத் தவ்ஹீதின் துணைத் தலைவர்  ஜமாலுத்தீன் கோரிக்கை வைத்தார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பப்பட்டவர்களைத் தவிர மற்ற அனைவரையும் வெளியேறுமாறு கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

ம்றைந்த கோல்டன் நிஜாமும் இதுபோல் ஒருமுறை வெளியேற்றப்பட்டது நினைவுக்கு வந்தது.

பின்னர் இரு தரப்பினரின் கருத்துகளையும் கோட்டாட்சியர் கேட்டார். கந்தூரியால் விளையும் தீமைகளையும் அனாச்சாரங்களையும் பட்டியலிட்டு மாவட்ட ஆட்சியருக்கு அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் எழுதிய கடிதத்தின் நகலைக் கோட்டாட்சியருக்கு வழங்கி, அக்கடிதத்தின் சாரத்தையும் செயலர் விளக்கினார். அத்துடன், காட்டுப்பள்ளி கந்தூரியை ஒரு காலத்தில் மேலத்தெருவினரும் கீழத்தெருவினரும் இணைந்து நடத்தியதில் இரு தெருவினருக்கும் கந்தூரியின்போது வெட்டு, குத்துகள் நடந்தேறி, யார் கந்தூரி நடத்துவது? என்ற் கேள்வியோடு நீதிமன்றம் வரை சென்று, தெருவுக்கு ஓர் ஆண்டு எனத் தீர்ப்பான பழைய வரலாறும் எடுத்துக் கூறப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 526ஆவது ஆண்டு கந்தூரி, இந்த ஆண்டு நோட்டீஸில் 756ஆம் ஆண்டு கந்தூரியான எப்படி என்றும் கேள்வி வைக்கப்பட்டது.

இந்த ஆண்டு கீழத்தெருவினருக்கான முறை வந்தும், கீழத்தெரு ஜமா அத்தினர் கந்தூரி எடுக்க மாட்டோம் என மறுப்புத் தெரிவித்து, கந்தூரித் தீமையிலிருந்து விலகிக் கொண்டுத் தீர்மானம் நிறைவேற்றியதும் கோட்டாட்சியருக்குச் சுட்டிக் காட்டப்பட்டது.

கடற்கரைத் தெருவில் கடந்த  நவம்பர் 2014இல் நடைபெற்ற கந்தூரியின் ஊர்வலம் மற்றும் கூடு சுற்றல் இரவின்போது நடந்தேறிய விதி மீறல்கள் அராஜகங்கள் பற்றி ததஜவின் அன்வர் அலீ விவரித்து, இஸ்லாத்துக்கு எதிரான கந்தூரியை எதிர்ப்பதற்கான காரணங்களை விளக்கினார். முத்துப்பேட்டை பாக்கர் அலி, அதிராம்பட்டினத்தாரின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, ஆதாயம் அடையப் பார்ப்பதாகவும் அதற்கான வீடியோ ஆதாரங்கள் தம்மிடம் இருப்பததாகவும் ததஜ அன்வர் அலீ கூறினார்.

கந்தூரிக் கமிட்டியினர், அவர்களின் தொன்மைப் பாட்டான, "காலங் காலமாக எடுத்து வரும் கந்தூரி" என்பதையே வளைந்து, நெளிந்து, குழைந்து பலமுறை சொல்லிக் கொண்டிருந்தனர். சலிப்படைந்த கோட்டாட்சியர், ஒரு கட்டத்தில், "இந்த விழா இஸ்லாத்தில் உள்ளதுதான் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லாதபோது, அதைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொள்வதுதான் நல்லது" என்று அறிவுரை கூறினார்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் கடந்த 9.5.2013 அமைதிக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்திய வேறொரு கோட்டாட்சியர், "கந்தூரி விழா கொண்டாடுவதற்கு உங்க வேதத்திலிருந்து ஒரு சூரா ஆதாரம் சொல்லுங்க" என்று கேட்டதும் பதில் சொல்ல முடியாமல் அப்போதைய கந்தூரி கமிட்டியினர் தலைகுனிந்ததும் நினைவுக்கு வந்தது.

"நாங்கள் அமைதியாகக் கந்தூரி நடத்துவோம்" என்று கந்தூரிக் கமிட்டித் தலைவர் சேக் தாவூது கூறினார். அதற்கு மறுப்புத் தெரிவித்த த.மு.மு.க. அஹ்மது ஹாஜா, அமைதியாகக் கந்தூரி நடத்துவோம் என்ற உறுதி கொடுக்கப்பட்ட அதே காட்டுப்பள்ளி ஊர்வலத்தில், தான் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானதையும் அவ்வழக்கில் பதியப்பட்ட முதல் தகவல் அறிககை 96&97/2012யின் கீழ் இன்னும் வழக்கு நடந்து வருவதாகவும் விவரித்து, ஊர்வலம் என்பதே உள்நோக்கத்தோடு (ஹிடன் அஜண்டாவாக) நடத்தப் படுவதுதான் உண்மை என்றார்.

இன்னும் பல்வேறு விளக்கங்களுக்குப் பின்னர், கீழ்க்காணும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு, எழுதிக் கையெழுத்துகள் பெறப்பட்டன:

இந்த அமர்வின் தீர்மானங்கள் பழைய தீர்மானங்களையும் உள்ளடக்கும் என்பதோடு ஊர்வலம் செல்லக்கூடிய பகுதிகளில் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பகுதியையும் இன்றைய தீர்மானத்தில் கூடுதலாக நான் சேர்த்திருக்கிறேன் என கோட்டாட்சியர் வலியுறுத்திக் குறிப்பிட்டார்.

உளத் தூய்மையுடன் எடுக்கப்படும் தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு வெற்றியைத் தருவதற்கு அல்லாஹ்வே போதுமானவன். அவனையே நாம் சார்ந்திருக்கிறோம்.