Wednesday 5 November 2014

அதிரை விவாதமும் அப்பாஸ் அலியின் மன மாற்றமும்

அல்லாஹ்வை அஞ்சி எடுத்த முடிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

அன்பான சகோதரர்களே! சில ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை குா்ஆனுக்கு முரண்படுகின்றது என்று சகோதரர் பீஜே முதலில் கூறினார். அவர் கூறியது உண்மை என உளப்பூர்வமாக நம்பி நானும் அந்த ஹதீஸ்களை மறுத்து வந்தேன். இது தொடர்பாக ஹதீஸ்கள் குா்ஆனுக்கு முரண்படுமா? என்ற நுாலையும் நான் எழுதினே். தவ்ஹீத் ஜமாத்தில் மற்றவர்களை விட இது பற்றி நான் அதிகமாக பேசியும் எழுதியும் இருக்கிறேன்.

இந்நிலையில் முன்பு முரண்பாடாக தெரிந்த பல ஹதீஸ்கள் தற்போது அவற்றுக்கும் குா்ஆனுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை என்ற உண்மை எனக்கு தெரியவந்தது. குா்ஆனுக்கு முரண்படுகிறது என்ற வாதத்திற்கு பின்னால் தேவையற்ற சந்தேகங்களும் அறியாமையும் சம்பந்தமில்லாமல் வசனங்களை மோதவிடும் போக்கும் காஃபிர் இதை ஏற்றுக்கொள்வானா என்ற மனநிலை மட்டுமே மறைந்துள்ளது என்பதை உணர்ந்துகொண்டேன்.

குறிப்பாக நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸ் குா்ஆனுடன் முரண்படவில்லை. அதை மறுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. அது ஆதாரப்பூர்வமான நபிவழிதான். முஃதசிலாக்களையும் சகோதரர் பீஜேவையும் தவிர இஸ்லாமிய வரலாற்றில் யாரும் இந்த நபிமொழியை மறுக்கவில்லை. 2 102வது வசனத்தின் நேரடி பொருளை மாற்றி இஸ்லாமிய வரலாற்றில் இது வரை எவரும் கொடுக்காத சகோதரர் பீஜே கொடுத்த மாற்று விளக்கமும் குா்ஆனுக்கு மாற்றமாக உள்ளது.

இந்நிலையில் நான் சிஹ்ரை நம்பியவர்கள் முஷ்ரிக் என்று கூறினால் முதலில் நபி (ஸல்) அவர்களை நான் முஷ்ரிக் என்று கூறுவதாக அர்த்தம். (அவூதுமில்லாஹ்). அடுத்து சகோதரர் பீஜேவையும் இவ்விசயத்தில் அவருடைய கருத்தை ஏற்றுக்கொள்பவர்களைத் தவிர்த்து உலகில் உள்ள மற்ற முஸ்லிம்கள் அனைவரையும் முஷ்ரிக்குகள் என்று கூற வேண்டிய நிலை உள்ளது. முஃமின்களை முஷ்ரிக்குகள் என்று நான் கூறுவதை விட பெரிய வழிகேடு வேறு ஒன்றும் இருக்க முடியாது.

இந்நிலையில் இதுபற்றி நான் மக்களுக்கு தெளிவுபடுத்தாமல் மரணித்துவிட்டால் என்னுடைய மறுமைவாழ்வு கேள்விக்குறியாகிவிடும்? எனவே நான் வெட்கப்படாமல் எனக்கு சரி என்று படும் விசயத்தை பகிரங்கமாக அறிவிக்கிறேன்.

நான் சிஹ்ர் தொடர்பாக முன்பு தெரிவித்த கருத்துக்களுக்கும் ஹதீஸ்கள் குா்ஆனுக்கு முரண்படுமா? என்று எழுதிய நுாலுக்கும் இனி எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இது தொடர்பாக சில தினங்களுக்குப் பிறகு நான் எனது விளக்கத்தை இன்ஷா அல்லாஹ் வெளியிடுவேன்.

தவ்ஹீத் ஜமாத்தில் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் நாளுக்கு நாள் நியாயமின்றி மறுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. மறுப்பதற்கு முன்பு மற்ற அறிகர்கள் யாரிடமும் ஆலோசனை செய்வதில்லை. மறுத்தப் பிறகு மற்றவர்களும் மறுத்தாக வேண்டிய நிலை வருகின்றது. மறுப்பதற்கு முன்பு மற்ற அனைவரிடமும் ஆலோசனை செய்யுங்கள் என்று நான் கோரிக்கை வைத்தப் பிறகும் அதை ஏற்காமல் சமீபத்தில் அதிராம்பட்டிணத்தில் நடந்த விவாவதத்தில் சில ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அநியாயமாக சகட்டுமேனிக்கு மறுக்கப்பட்டது.


தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து கொண்டு இதை உரியவா்களிடத்தில் தெரிவிக்க என்னால் இயலவில்லை. எனவே வெளியில் இருந்து இதுபற்றி பேச முடிவு செய்துள்ளேன். இது திடீரென அவசர கோலத்தில் நான் எடுத்த முடிவில்லை. பல பிரச்சனைகளை சந்தித்து பலமாதங்கள் சென்ற பிறகு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனுபவத்தில் உணர்ந்த அடிப்படையில் எடுத்த முடிவாகும். யாரையும் காயப்படுத்துவது என் நோக்கமல்ல. பொறுமையுடனும் சகோதர உணர்வோடும் இந்தப் பிரச்சனையை நோக்குமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.

1 comment:

  1. இந்த காணொளியில் சொல்லப்படுவதைக் கேட்டதும்.... அட ! மூடர்களா ! [என்றுதான் அழைக்கச் சொல்கிறது...]

    தலை மறுத்தால் வாலைச் சுருட்டியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதை தெளிவாக இந்த சகோதரர் எடுத்து வைக்கிறார்.

    அல்ஹம்துலில்லாஹ் !

    அதிரையில் நடந்த விவாதம்... இவ்வாறாக சகோதரர்களின் மனதில் இருப்பதை வெளிக் கொணர வைத்த அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் !

    ReplyDelete